வைராபாளையம் நீரேற்று நிலையம் அருகில் காவிரி ஆற்றில் கலக்கும் கழிவுநீர் - சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஈரோடு வைராபாளையம் நீரேற்று நிலையம் அருகில் உள்ள காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் தேவையான குடிநீர் காவிரி ஆற்றில் இருந்து எடுத்து சுத்திகரிப்பு செய்து வழங்கப்படுகிறது. இதற்காக வைராபாளையம், பி.பி.அக்ரஹாரம், ஆர்.என்.புதூர் உள்ளிட்ட இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் வைராபாளையம் பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வீரப்பன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த நீரேற்று நிலையம் அமைந்துள்ள காவிரி ஆற்றில் பிச்சைக்காரன் பள்ளம் ஓடை வந்து இணைகிறது. ஓடையில் வரும் கழிவுநீர் காவிரி ஆற்றில் நேரடியாக கலந்ததால் சுகாதாரமான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கரையோரமாக ஓடையின் குறுக்கே மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன.
மணல் மூட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் நீரேற்று நிலையத்தின் மின்மோட்டார் உள்ள இடத்தில் கழிவுநீர் கலக்காமல் திருப்பி விடப்பட்டது. இந்த நிலையில் கரையோரமாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மணல் மூட்டைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு கழிவுநீர் மீண்டும் ஆற்றின் அதே பகுதியில் கலந்து வருகிறது. அங்கிருந்து தண்ணீர் வழக்கம்போல் நீரேற்றம் செய்யும்போது குடிநீருடன் கழிவுநீர் கலந்துசெல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே நீரேற்று நிலையம் பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சி பகுதியில் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதனால் குடிநீரை முறையாக காய்ச்சி குடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வைராபாளையம் பகுதியில் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதால், குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story