கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் கழுதை பால் விற்பனை மும்முரம்


கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் கழுதை பால் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 25 Dec 2018 10:46 PM GMT (Updated: 25 Dec 2018 10:46 PM GMT)

கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் கழுதை பால் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கொள்ளிடம் டோல்கேட்,

மனித வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது உடல் ஆரோக்கியமாகும். இதில் தற்போது உள்ள குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவின் காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்பட்டு அவதியடைந்து வருகின்றனர்.

குழந்தைகளின் ஊட்டச்சத்திற்கு பசும் பால் பெரும் பங்கு வகித்து வருகிறது. அதன் வரிசையில் கழுதை பால் குழந்தைகளுக்கு தேவையான அதிகப் படியான ஊட்டச்சத்தை கொடுக்கும் என பழங்காலத்தில் இருந்து நம்பப்படுகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பச்சையம்மாள் (வயது 35) என்பவர் தனது சொந்த வளர்ப்பில் பராமரித்து வரும் கழுதைகளை, பல்வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று மக்களின் முன்னிலையில் பாலை கறந்து விற்று வருகிறார்.

இதனால் தற்போது, கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் கழுதை பால் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கழுதையை அதன் குட்டியுடன் அழைத்துக்கொண்டு கிராம பகுதிகளில் கழுதை பால் குறித்த நன்மைகளை சத்தம் போட்டவாறு கூவி, கூவி விற்பனையில் ஈடுபடுகிறார். பால் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அந்த இடத்திலேயே கறந்து ஒரு சங்கு பால் ரூ.50 என விற்கிறார். இதனை பருகுவதன் மூலம் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வயிறு மந்தம், சூடு, காய்ச்சல், சளி, இருமல், போன்ற நோய்கள் குணமாவதுடன் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும் என கருதி அந்த பகுதியில் உள்ள தாய்மார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது குழந்தைகளுக்கு கழுதை பால் வாங்கி கொடுத்து வருகின்றனர்.

Next Story