கறம்பக்குடியில் சிம்னி, அரிக்கேன் விளக்குகள் விற்பனை அதிகரிப்பு


கறம்பக்குடியில் சிம்னி, அரிக்கேன் விளக்குகள் விற்பனை அதிகரிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2018 4:27 AM IST (Updated: 26 Dec 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி பகுதியில் சிம்னி, அரிக்கேன் விளக்குகளின் விற்பனை அதிகரித்து உள்ளது.

கறம்பக்குடி,

அறிவியல் முன்னேற்றம், நாகரிக வளர்ச்சி போன்வற்றால் நாம் அனுபவித்து வரும் வசதிகள் நிரந்தரமானதல்ல என்பதை கஜா புயலின் தாக்குதலுக்கு பின்னர் தான் இன்றைய தலைமுறையினர் உணர தொடங்கினர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு வீட்டிலும் மண்எண்ணெய் மூலம் எரியும் சிம்னி மற்றும் அரிக்கேன் விளக்குகள் இருக்கும். அதில் உள்ள குடுவை கண்ணாடிகள் காற்றிலும் விளக்கு அணையாமல் பாதுகாக்கும்.

ஆனால் காலமாற்றத்தினால் மின்சாரத்தின் மூலம் சார்ஜ் ஏற்றப்படும் விதவிதமான விளக்குகள் வந்தன. பின்னர் வீடுகளில் சிம்னி, அரிக்கேன் விளக்குகள் காணாமல் போயின. கஜா புயலுக்கு பின்னர் தான் புயல் பாதித்த பகுதிகளில் மக்கள் அரிக்கேன், சிம்னி விளக்குகளின் பயன்களை உணர தொடங்கினர்.

புயலின் கோர தாண்டவத்தால் மின் கட்டமைப்பே முழுமையாக சீர்குலைந்த நிலையில் சார்ஜர் லைட்டு களையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் விலை உயர்வால் மெழுகுவர்த்தியையும் வாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். தற்போது வீடுகளுக்கான மின்சாரம் வழங்கப்பட்ட போதிலும் அரிக்கேன், சிம்னி விளக்குகளின் தேவையை உணர்ந்த மக்கள் அவற்றை வீடுகளில் வாங்கி வைத்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கறம்பக்குடி பகுதியில் உள்ள கடைகளில் அரிக்கேன், சிம்னி விளக்குகளின் விற்பனை அதிகரித்து உள்ளது. மேலும் வடமாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கறம்பக்குடிக்கு வந்து அரிக்கேன், சிம்னி விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கஜா புயலின் தாக்கம் கறம்பக்குடி பகுதி மக்களை பழமையை தேடி செல்லும் நிலையை உருவாக்கி உள்ளது.

Next Story