வேறு மதத்தை சேர்ந்தவருடன் மகளுக்கு நாளை திருமணம்: விரக்தியில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை உடன்குடியில் பரிதாபம்


வேறு மதத்தை சேர்ந்தவருடன் மகளுக்கு நாளை திருமணம்: விரக்தியில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை உடன்குடியில் பரிதாபம்
x
தினத்தந்தி 26 Dec 2018 2:52 PM IST (Updated: 26 Dec 2018 2:52 PM IST)
t-max-icont-min-icon

வேறு மதத்தை சேர்ந்தவருடன் மகளுக்கு நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், விரக்தி அடைந்த அந்த பெண்ணின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடன்குடி, 

வேறு மதத்தை சேர்ந்தவருடன் மகளுக்கு நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில், விரக்தி அடைந்த அந்த பெண்ணின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடன்குடியில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மகளுக்கு நாளை திருமணம்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சாதரக்கோன்விளையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 47). இவர் உடன்குடி தேரியூரில் டீக்கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மூத்த மகளுக்கும், வேறு மதத்தை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க தேவி ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. இதற்கு ஜெயபால் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இருந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் தேவி திருமணத்துக்கு நாள் குறித்து, அழைப்பிதழ் அடித்து உறவினர்களுக்கு கொடுத்து வந்தார். திருமணம் நாளை (வியாழக்கிழமை) நடக்க இருந்தது.

தற்கொலை

தான் சொல்வதை கேட்காமல் தனது மகளுக்கு வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து வைக்க மனைவி முடிவு செய்ததால் ஜெயபால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் கடையை முடித்து விட்டு ஜெயபால் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் யாரும் இல்லை. ஏற்கனவே மனவேதனையில் இருந்த அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து உடனடியாக குலசேகரன்பட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் உடன்குடியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story