கடையம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் நெற்பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனை
கடையம் அருகே விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன.
கடையம்,
கடையம் அருகே விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன. இது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நெற்பயிர் சேதம்
கடையம் அருகே உள்ள ஜம்பு நதி கடவக்காடு பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. இது மலையடிவார பகுதி என்பதால் இங்கு காட்டுப்பன்றிகள், மிளா உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி வந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை பூமிநாதன் என்பவரது விவாசய நிலத்திற்குள் 5–க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்துள்ளன. அந்த யானைகள் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தின.
காட்டு யானைகளை விரட்டும் பணி
இதுகுறித்து தகவலறிந்த வனவர் முருகசாமி தலைமையில் வனக்காப்பாளர்கள் மணி, சோமசுந்தரம், வனக்காவலர் சேகர், வேட்டை தடுப்பு காவலர்கள் சக்தி முருகன், மணிகண்டன், இசக்கி, மனோஜ் ஆகியோர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சோலார் மின்வேலி
இதுகுறித்து கடையம் வனச்சரகர் நெல்லை நாயகம் கூறியதாவது:– கடையம் வனச்சரக பகுதியில் 32 கி.மீட்டர் தொலைவுக்கு சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு, வனவிலங்குகள் ஊருக்குள் வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது யானைகள் புகுந்த கடவாக்காடு முதல் மத்தளம்பாறை வரையிலான 7 கி.மீட்டர் தொலைவுக்கு சோலார் மின்வேலி அமைப்பதற்காக அரசுக்கு திட்டமதிப்பீடு தயார் செய்யபட்டு அனுப்பப்பட்டுள்ளது.
அதேசமயம் இந்த பகுதியிலுள்ள விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகளை தனிப்படைகள் மூலம் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பகுதியில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதை தடுக்கு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story