பேட்டையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது வாடிக்கையாளர் போல் பேசி போலீசார் மடக்கிப்பிடித்தனர்
பேட்டையில் கஞ்சா விற்ற 3 பேரை வாடிக்கையாளர் போல் பேசி போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
பேட்டை,
பேட்டையில் கஞ்சா விற்ற 3 பேரை வாடிக்கையாளர் போல் பேசி போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
கஞ்சா விற்பனை
நெல்லையை அடுத்த பேட்டை பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த நபர்களை கையும், களவுமாக பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். வாடிக்கையாளர் போல் பேசி அவர்களை தங்களது வலையில் வீழ்த்துவது என்று முடிவு செய்தனர்.
கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் சில சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி வந்து உள்ளனர். கஞ்சா கும்பலை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர், ‘ஜாகிர் உங்க நம்பரை கொடுத்தார்’ என்று கூறுவார். உடனே மறுமுனையில் பேசுபவர், ‘என்ன விஷயம்?’ என்பார். உடனே வாடிக்கையாளர், ‘தூள் இருக்கா?’ என்று கேட்பார். அதற்கு மறுமுனையில் பேசுபவர், ‘குப்பையா? தெளிவா?’ என்பார். அதற்கு வாடிக்கையாளர், ‘குப்பை’ என்று கூறினால் ஒரு இடத்தை கூறி அங்கு வந்ததும் அவரிடம் கஞ்சாவை கொடுப்பர். ‘தெளிவு’ என்று கூறினால் ‘தவறான அழைப்பு’ என்று கூறி இணைப்பை துண்டித்து விடுவர்.
3 பேர் கைது
இதை அறிந்த போலீசார், கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர் போல் பேசினர். அதை உண்மை என்று நம்பி, அவர்களை டவுன் கோடீஸ்வரன்நகர் பகுதிக்கு வரும்படி அழைத்து உள்ளனர். உடனே போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்றனர். அப்போது அங்கு வந்த 3 பேர், அவர்கள் போலீசார் என தெரியாமல் கஞ்சாவை கொடுத்தனர். உடனே போலீசார் அவர்கள் 3 பேரையும் கையும், களவுமாக மடக்கிப்பிடித்தனர்.
போலீசாரின் விசாரணையில், அவர்கள் பேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ஷேக் அலி மகன் மைதீன் (வயது 25), பேட்டை எம்.ஜி.பி. தெருவை சேர்ந்த இஸ்மாயில் மகன் அசாருதீன் (23), சிந்துபூந்துறையை சேர்ந்த முகமது இப்ராகிம் மகன் முகமது அபுதாகிர் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story