தாளவாடி அருகே வாலிபர் மர்ம சாவு கொலையா? போலீஸ் விசாரணை
தாளவாடி அருகே வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாளவாடி,
தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தா. இவருடைய மகன் சங்கரா (வயது 25). இவர் கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வேலையை முடித்துவிட்டு சங்கரா வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தன்னுடைய பெற்றோரிடம், வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அன்று இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் சங்கராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடினார்கள். ஆனால் சங்கராவை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அவர்கள் இதுபற்றி தாளவாடி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சங்கராவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை தாளவாடி கும்டாபுரம் ரோட்டில் உள்ள கும்பேஸ்வரா கோவில் பகுதியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை பார்வையிட்டனர். அப்போது, பிணமாக கிடந்தவர் கும்டாபுரத்தை சேர்ந்த சிவானந்தாவின் மகன் சங்கரா என்பது தெரியவந்தது. இதுகுறித்து சங்கராவின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் அங்கு வந்து சங்கராவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதைத்தொடர்ந்து சங்கராவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்த சங்கரா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story