உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: சங்கு ஊதி விவசாயிகள் போராட்டம்
உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சங்கு ஊதி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு,
விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு, திருப்பூர் உள்பட மொத்தம் 8 மாவட்டங்களில் விவசாயிகள் கடந்த 17-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி ஈரோடு அருகே மூலக்கரையில் விவசாயிகள் 10-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 6 பெண்கள் உள்பட 11 பேர் கடந்த 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நீர் ஆகாரம் மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் அவர்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். மேலும் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் ஒன்று தயார் நிலையில் போராட்டம் நடக்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு 2 பெண்கள் திடீரென மயக்கம் அடைந்தனர். ஆனால் அவர்களுக்கு உடனடியாக அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, புதை மின்கேபிள் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி விவசாயிகள் நேற்று சங்கு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தில் ம.தி.மு.க. மாநில பொருளாளர் அ.கணேசமூர்த்தி, போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சி.எம்.துளசிமணி, கவின், பூபதி, கொ.ம.தே.க. பொறுப்பாளர் பாலு, அத்திக்கடவு-அவினாசி திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:-
உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளாகிய நாங்கள் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுடைய கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இன்று (வியாழக்கிழமை) மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க., பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8 மணிக்கு கலந்துகொண்டு பேசுகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story