நீலகிரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ரூ.100 கோடி பணபரிவர்த்தனை பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இதனால் ரூ.100 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
தேசியமயமாக்கப்பட்ட தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா உள்ளிட்ட வங்கிகளை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முயற்சி செய்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு வங்கி ஊழியர்கள் சம்மேளன கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர், குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 94 வங்கி கிளைகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் இதில் பணியாற்றி வரும் 684 வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்காததால் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை கொண்டாட நீலகிரிக்கு சுற்றுலா வந்த பயணிகள், மாவட்ட மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.
வேலை நிறுத்தம் குறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜ்குமார் கூறிய தாவது:-
தேனா வங்கி, பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கிகளை ஒன்றாக இணைப்பதை கண்டித்தும், வசதி இருந்தும் வாங்கிய கடனை செலுத்தாத தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் எந்த பணபரிவர்த்தனைகளும் நடைபெற வில்லை. நீலகிரி மாவட்டத்தில் ரூ.100 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. மேலும் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் வைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு உடனடியாக வங்கி ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். இல்லை எனில் தொடர் போராட்டங்கள் நடத்தவும் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story