பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 27 Dec 2018 4:30 AM IST (Updated: 27 Dec 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை, 


புதுக்கோட்டை மாவட்ட அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு சார்பில், பொதுத்துறை வங்கிகளான விஜயா வங்கி மற்றும் தேனா வங்கிகளை வங்கி சீரமைப்பு என்ற பெயரில் பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைப்பதை உடனடியாக கைவிட வேண்டும். அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் 11-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ரூ.1 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் பெற்று அந்தந்த வங்கிகளில் திரும்ப செலுத்தாதவர்கள் மீது உடனடியாக சட்டப்படி கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 160 வங்கிகளை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள 160 வங்கிகளும் மூடப்பட்டு இருந்தன. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.150 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்தத்தையொட்டி புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க உதவி பொது செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர் சங்க மாநில தலைவர் ராமதுரை, திருச்சி மண்டல இந்தியன் வங்கி ஊழியர் சங்க உதவி செயலாளர் கார்த்திகேயன், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் புதுக்கோட்டை மாவட்ட கனரா வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Next Story