வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்; ரூ.500 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிப்பு
வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் புதுவையில் ரூ.500 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி,
வங்கிகளை இணைக்க கூடாது, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக புதுவையிலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
புதுவையில் உள்ள 140 வங்கிக்கிளைகளில் பணிபுரியும் 1,500 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இதனால் வங்கிகள் மூடப்பட்டு கிடந்தன.
பல இடங்களில் ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டு இருந்தன. திறந்து இருந்த ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக ஒரேநாளில் நேற்று சுமார் ரூ.500 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் யூகோ வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுந்தரவரதன் தலைமை தாங்கினார். வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் முனுசாமி, கருணாகரன், முரளிதரன், திருமாறன், விஸ்வநாதன், சுதந்திரகுமார், அரிகரன், ரவீந்திரன், நாகராஜன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story