‘கஜா’ புயலால் சாயாத மரங்களை வெட்டியதால் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
மணப்பாறை அருகே, ‘கஜா‘ புயலால் சாயாத மரங்களையும் வெட்டியதால் லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணப்பாறை,
‘கஜா‘ புயலால், மணப்பாறை பகுதியில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. அந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி நிர்வாகம், வருவாய் துறை சார்பில் ஏலம் விடப்பட்டு வருகிறது. இதேபோல, கண்ணுடையான்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தபுடையான்பட்டி பகுதியில் உள்ள மணியார்குளம், பெரியகுளம் உள்ளிட்ட 4 குளக்கரை பகுதிகளில் புயலால் சாய்ந்த 286 மரங்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது.
மரங்களை ஏலத்தில் எடுத்த காண்ட்ராக்டர் தொழிலாளர்கள் மூலம் வெட்டி லாரிகளில் கொண்டு சென்று வருகிறார். ஏலத்தில் விடப்பட்டது, 286 மரங்கள் தான். ஆனால், குளக்கரை பகுதிகளில் புயலால் சாயாத மரங் களையும் வெட்டி லாரியில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை முத்தபுடையான்பட்டி அருகே உள்ள மணியார்குளத்தில் இருந்த புயலால் சாயாத கருவேல மரங்களை சிலர் வெட்டிக் கொண்டிருந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் மரத்துண்டுகள் ஏற்றப்பட்ட லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், லாரியில் இருந்த மரங்களை இறக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
மேலும், இதுகுறித்து ஊராட்சி செயலாளர் முறையாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story