ஈரோடு கோட்டை பகுதியில் மழைநீர் வடிகால் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஈரோடு கோட்டை பகுதியில் மழைநீர் வடிகால் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு,
ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் இருந்து வரும் மழைநீர், மேட்டூர்ரோடு வழியாக சென்று பெரும்பள்ளம் ஓடையில் கலந்து வந்தது. பிரப்ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், மேட்டூர் ரோட்டில் இருந்து கோட்டை பகுதி வழியாக மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு மேட்டூர் ரோட்டில் பொதுமக்கள் சிலர் நேற்று காலை திரண்டனர். மழைநீர் வடிகால் அமைக்கப்படுவதற்காக தூர்வாரப்படும் ஓடைக்கு அருகில் அவர்கள் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாநகராட்சி 2-ம் மண்டல உதவி ஆணையாளர் சண்முகவடிவு, டவுன் போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு எட்டியப்பன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
மழைக்காலத்தில் கோட்டை பகுதியில் ஏற்கனவே குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கும். பெரும்பாலான வீடுகளில் மழைநீர் புகுந்துவிடும். இந்த நிலையில் எங்கள் பகுதி வழியாக மழைநீர் வடிகால் திட்டம் அமைக்கப்பட்டால் மழைக்காலத்தில் பெரும் சிரமம் ஏற்படும். அகில்மேடு முதலாம் வீதி முதல் 6-வது வீதி வரை, கண்ணகி வீதி, தெப்பக்குளம் வீதி, கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடும். எனவே எங்கள் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதற்கு மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகவடிவு கூறுகையில், “மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் தொடர்பாக எந்தவித உத்தரவும் இல்லை. ஓடையை தூர்வாரும் பணியை மட்டுமே செய்கிறோம். எனவே மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்டுக்கொள்ளலாம்”, என்றார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பொதுமக்களிடம் கூறும்போது, “மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதால் தற்காலிகமாக கோட்டை பகுதியில் மழைநீர் வடிகால் திட்டம் அமைக்கப்பட உள்ளது. பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு மீண்டும் மேட்டூர்ரோடு வழியாக மழைநீர் வடிகால் அமைக்கப்படும்”, என்றனர். ஆனால் பொதுமக்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தங்களது பகுதியில் மழைநீர் வடிகால் திட்டம் அமைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
மேலும், அவர்கள் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஒருவருடைய இருசக்கர வாகனத்தில் ஏறி பின்னால் அமர்ந்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து பொதுமக்கள், மாநகராட்சி அலுவலகத்துக்கு கோரிக்கை மனு கொடுப்பதற்காக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story