கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம்: புதியதாக பதவி ஏற்ற 8 மந்திரிகளுக்கு இன்று இலாகா ஒதுக்கீடு - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அறிவிப்பு


கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம்: புதியதாக பதவி ஏற்ற 8 மந்திரிகளுக்கு இன்று இலாகா ஒதுக்கீடு - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Dec 2018 4:45 AM IST (Updated: 27 Dec 2018 2:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரி சபை விரிவாக்கத்தின் போது புதியதாக பதவி ஏற்ற 8 மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரு,

கர்நாடக மந்திரி சபை விரிவாக்கத்தின் போது புதியதாக பதவி ஏற்ற 8 மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் நேற்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர், புதிய மந்திரிகளுக்கான இலாகா இன்று (வியாழக்கிழமை) ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் உள்ளனர். கூட்டணி ஆட்சி நடப்பதால் மந்திரி பதவி கிடைக்காமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 22-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. மந்திரிசபையில் இருந்து ரமேஷ் ஜார்கிகோளி, சங்கர் ஆகிய 2 பேர் நீக்கப்பட்டனர். புதியதாக 8 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.

மந்திரிசபையில் இருந்து நீக்கப்பட்டதால், ரமேஷ் ஜார்கிகோளி கடும் அதிருப்தியில் உள்ளார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் மந்திரி பதவி கிடைக்காத சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் நேற்று பெங்களூருவில், கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், செயல் தலைவர் ஈஸ்வர் கன்ட்ரே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் போலீஸ், பெங்களூரு வளர்ச்சி, மந்திரி யு.டி.காதரிடம் வீட்டு வசதி, நகர வளர்ச்சி, டி.கே.சிவக்குமாரிடம் நீர்ப்பாசனம், மருத்துவ கல்வி, மந்திரி கிருஷ்ண பைரேகவுடாவிடம் கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் சட்டம், சட்டசபை விவகாரம் ஆகிய துறைகள் உள்ளன.

இதில் 2 துறைகள் வைத்துள்ள மந்திரிகள் ஒரு துறையை விட்டுக்கொடுக்க வேணுகோபால் மற்றும் சித்தராமையா ஆகியோர் கோரிக்கை வைத்தனர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்ைல. புதிய மந்திரிகளுக்கு ஒதுக்க வேண்டிய இலாகாக்கள் குறித்த பட்டியலுடன் வேணுகோபால் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

ராகுல் காந்தியுடன் ஆலோசித்த பிறகு இலாகா ஒதுக்கீடு பட்டியல் இன்று(வியாழக்கிழமை) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வேணுகோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதிய மந்திரிகளுக்கு ஒதுக்க வேண்டிய இலாகா விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த பட்டியலை இறுதி செய்துள்ளோம். ராகுல் காந்தியின் ஒப்புதலை பெற்று இலாகா ஒதுக்கீடு பட்டியல் நாளை (அதாவது இன்று) வெளியிடப்படும்.

ராமலிங்கரெட்டி எங்கள் கட்சியின் மூத்த தலைவர். அவருக்கு ஆதரவாக கட்சி இருக்கிறது. ரமேஷ் ஜார்கிகோளி கட்சியை விட்டு விலக மாட்டார். எம்.எல்.ஏ.க்கள் யாரும் காங்கிரசை விட்டு விலக மாட்டார்கள். இவ்வாறு வேணுகோபால் கூறினார்.

புதியதாக பதவி ஏற்ற 8 மந்திரிகளுக்கு ஒதுக்கப்படும் இலாகா விவரங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

1. எம்.பி.பட்டீல் - போலீஸ் இலாகா ,
2. ரஹிம்கான் - சிறுபான்மையினர் நலன்,
3. துகாராம் - இளைஞர் நலன், விளையாட்டு,
4. ஆர்.பி.திம்மாப்பூர் - மருத்துவ கல்வி,
5. பரமேஸ்வர் நாயக் - அடிப்படை கட்டமைப்பு, தொழிற்பயிற்சி,
6. சதீஸ் ஜார்கிகோளி - வனம், சுற்றுச்சூழல்,
7. எம்.டி.பி.நாகராஜ் - வீட்டு வசதி,
8. சிவள்ளி - நகரசபை நிர்வாகம்

இது தவிர ஏற்கனவே உள்ள மந்திரிகளின் இலாகாக்களிலும் சிறிய அளவில் மாற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


Next Story