கும்மிடிப்பூண்டி அருகே 12 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் சிக்கியது 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே 11 ஆயிரத்து 830 லிட்டர் எரிசாராயம் சிக்கியது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் நேற்று ரகசிய தகவலின் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட மது விலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில் மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆந்திரா வழியாக சென்னை நோக்கி வந்த ஒரு குறிப்பிட்ட சரக்கு லாரியை மட்டும் அவர்கள் மடக்கி நிறுத்தினர். லாரியில் இருந்த டிரைவர், போலீசாரிடம் புதுச்சேரிக்கு ரசாயனம் எடுத்து செல்வதாக கூறினார்.
இருப்பினும், போலீசார் மேற்கண்ட லாரியில் சோதனை செய்தபோது அதில் 338 பிளாஸ்டிக் கேன்களில் மொத்தம் 11 ஆயிரத்து 830 லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரியவந்தது. அந்த லாரி சென்னை வந்ததும் சென்னையை சேர்ந்த ஒருவரது வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல இருந்ததும் தெரியவந்தது.
சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நேரில் வந்து ஆய்வு நடத்தினார். மற்றொரு லாரியிலும் எரிசாராயம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலையடுத்து அந்த லாரியை பிடிக்கும் வகையில் வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடியை போலீசார் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
எரிசாராயம் கடத்தியது தொடர்பாக கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டை சேர்ந்த ரமேஷ் (வயது 45), மேலையனூரை சேர்ந்த கிளனர் முருகன் (43) மற்றும் உடன் வந்த மாமண்டூரை சேர்ந்த சங்கர்(40) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story