சுனாமி நினைவு தினம்: அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
சுனாமி நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமியால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். இந்த கோரச் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் தமிழக மக்கள் ஆண்டு தோறும் தமிழக கடற்கரைகளில் சுனாமியால் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை காசிமேடு, பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் நேற்று 14-வது ஆண்டாக சுனாமி நினைவு தின அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னை காசிமேடு கடற்கரையில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் முன்னாள் எம்.பி. பாலகங்கா, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் ஆர்.எம்.டி.ரவீந்திரஜெயன் மற்றும் காசிமேடு மீனவ மக்கள் திரளாக கலந்துகொண்டு சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முதலில், காசிமேடு கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி நினைவு மேடையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து படகில் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்.
இதே போன்று, அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் வடசென்னை வடக்கு(கிழக்கு) மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் மற்றும் காசிமேடு பகுதி மக்கள் சூரியநாராயணா பவர் குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி நினைவு பந்தலில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அங்கு, இறந்த குழந்தையை தாய் மடியில் வைத்து அழுவது போன்ற மணல் சிற்பம் அமைக்கப்பட்டிருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை நெகிழச்செய்தது. நினைவு பந்தலில் அஞ்சலி செலுத்திய பின்னர், அங்கு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று காசிமேடு சுடுகாட்டுக்கு பின்புறம் உள்ள கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது ஆதரவாளர் வெற்றிவேல் மற்றும் பொதுமக்கள் காசிமேடு கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி நினைவு மேடையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து படகில் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோன்று, சென்னை விசைப்படகு மரம் விடும் தொழிலாளர் நலச்சங்கம், சென்னை-செங்கை சிங்காரவேலர் விசைப்படகு உரிமையாளர் சங்கம், சென்னை பைபர் படகு மீன்பிடி தொழிலாளர் நலச்சங்கம் போன்ற பல்வேறு மீன்பிடி சங்கங்கள் சார்பிலும் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது. கட்சியினர், அமைப்பினர் அல்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் உறவுகளை நினைத்து கடலில் பால் ஊற்றியும், மலர் தூவியும் தங்கள் அஞ்சலியை காணிக்கையாக்கினர்.
எண்ணூர் கடற்கரையில் சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன் தலைமையில் சுனாமியால் உயிர் இழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், துணை தலைவர் பி.டி.அரசகுமார், மீனவர் அணி தலைவர் எஸ்.சதீஷ், மாநில செயலாளர் செம்மலர் சேகர், தெற்கு ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் முரளிதரன் உள்பட நிர்வாகிகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மீனவ பெண்களுக்கு பா.ஜ.க. சார்பில் புடவைகள் வழங்கப்பட்டது.
இதேபோல காங்கிரஸ் கட்சி சார்பில் தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், மீனவ காங்கிரஸ் தலைவர் கஜநாதன், துணை தலைவர் கருணாமூர்த்தி உள்பட நிர்வாகிகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுனாமியில் உயிர் இழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் கடலில் இறங்கி பால் ஊற்றி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார், தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு அமைதி பேரணியாக வந்தனர். அவர்கள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மணல் மேட்டில் அஞ்சலி செலுத்தினார்கள்.
சுனாமியில் உயிர் இழந்தவர்களின் உறவினர்கள் சிலர் பட்டினப்பாக்கம் கடற்கரையில் அஞ்சலி செலுத்த வந்தபோது தங்களை அறியாமல் கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைக்கும் விதமாக இருந்தது.
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சுனாமியில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர் உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story