மிளகாய் பொடி தூவி பணம் பறித்த வழக்கில் திடீர் திருப்பம்: ரூ.13 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொள்ளையடித்தது அம்பலம் விசாரணை அமலாக்கத்துறைக்கு மாற்றம்


மிளகாய் பொடி தூவி பணம் பறித்த வழக்கில் திடீர் திருப்பம்: ரூ.13 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொள்ளையடித்தது அம்பலம் விசாரணை அமலாக்கத்துறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 27 Dec 2018 3:30 AM IST (Updated: 27 Dec 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னை நந்தனத்தில் செல்போன் கடைக்காரரிடம் மிளகாய் பொடி தூவி ரூ.4 லட்சம் பறித்த வழக்கில் திடீர் திருப்பமாக, ரூ.13 லட்சம் அமெரிக்க டாலர்கள் கொள்ளை போனது அம்பலமானது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட உள்ளது.

சென்னை, 

சென்னை நந்தனம் சிக்னல் அருகே செல்போன் கடைக்காரர் ஜாபர் சாதிக் என்பவரிடம் மிளகாய் கொடி தூவி ரூ.4 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கில் அவரது நண்பரான திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தமீம் அன்சாரி மற்றும் அவரது கூட்டாளிகள் விக்கி, கார்த்திக், அருண், மனோகரன் ஆகியோரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. முதலில் ரூ.4 லட்சம் கொள்ளை போனதாக தகவல் வெளியானது. ஆனால் ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்த பணத்தை கைதானவர்களிடம் இருந்து போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்க டாலர்களை சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் பண மாற்றும் நிறுவனத்தில் இருந்து வாங்கி உள்ளனர். அதற்கு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை. வெளிநாட்டுக்கு ஹவாலா முறையில் கடத்துவதற்காக இந்த பணம் கொண்டு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி தேனாம்பேட்டை போலீசார், ரிசர்வ் வங்கி மற்றும் அமலாக்கத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதன்படி ரிசர்வ் வங்கி அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் விரைவில் இந்த பணபரிமாற்றம் பற்றி விசாரணை நடத்துவார்கள் என்று தேனாம்பேட்டை போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைவாக கைது செய்த தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார்.

Next Story