மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.10 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ரூ.10 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,
வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிடக்கோரி கடந்த 21-ந் தேதி வங்கி அதிகாரிகள் மட்டும் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஊதிய உயர்வுக்கான விதிகளை தளர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகளுடன் ஊழியர்களும் சேர்ந்து நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன் படி, நேற்று நாடு முழுவதும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள்- அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதையொட்டி திண்டுக் கல் மாவட்டத்தில் தனியார் வங்கிகளை தவிர அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில் திண்டுக்கல் சாலைரோட்டில் உள்ள கனரா வங்கி முன்பு நேற்று காலை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதற்கு ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க துணை செயலாளர் ஜோன்ஸ் கிங்ஸ்டன் தலைமை தாங்கி பேசினார். வங்கி அதிகாரிகள் சங்க மண்டல செயலாளர் அசோக்குமார் சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதுகுறித்து அசோக்குமாரிடம் கேட்டபோது, திண்டுக் கல் மாவட்டத்தில் 200 தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 2 ஆயிரம் பேர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதன்காரணமாக நேற்று பண பரிமாற்றம், காசோலை மாற்றம் உள்பட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று சுமார் ரூ.10 கோடி பரிவர்த்தனைகள் முடங்கி உள்ளது என்றார்.
Related Tags :
Next Story