காசிமேட்டில் போக்குவரத்து போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய ரவுடி
எண்ணூர் விரைவு சாலையில் காசிமேடு பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் தேசிங்கு (வயது 41). இவர், நேற்று பகல் எண்ணூர் விரைவு சாலையில் காசிமேடு பகுதியில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது மோட்டார்சைக்கிளில் கூட்டாளியுடன் வந்த காசிமேடு பல்லவன் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி தீனா(26), போலீஸ்காரர் தேசிங்கின் முதுகில் கத்தியால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். இதில் காயமடைந்த போக்குவரத்து போலீஸ்காரர் தேசிங்கு, சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய ரவுடி தீனாவை தேடி வருகின்றனர்.
போக்குவரத்து போலீஸ் தேசிங்கு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக வேலை பார்த்தபோது ரவுடி தீனாவை பலமுறை கைது செய்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தீனா, தற்போது போக்குவரத்து போலீசாக வேலை பார்த்து வரும் தேசிங்கை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
Related Tags :
Next Story