சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் மாநில அரசு திட்டமாக மாற்றம்
சென்னையில் செயல்படுத்தப்பட உள்ள 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் மாநில அரசு திட்டமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தின. இந்த திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் தலா 20 சதவீதம், மீதம் உள்ள 60 சதவீதத்தை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஏற்று ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகள் நிறைவடைந்து உள்ளன.
தற்போது மாதவரம்-கோயம்பேடு- சோழிங்கநல்லூர் பகுதிகளை இணைக்கும் வகையில் 2-வது வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக மாதவரம் - சிறுசேரி சிப்காட், கோயம்பேடு - கலங்கரை விளக்கம், மாதவரம் - சோளிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் 107.5 கிலோ மீட்டர் தூரத்தில் 104 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிக்காக ரூ 79 ஆயிரத்து 961 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 52.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் நிலையில் உள்ளது.
இந்தநிலையில் முதல்கட்டத்தில் எதிர்பார்த்த அளவு பயணிகள் பயணிக்காததால், 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு முறையான பதில் அளிக்கவில்லை. அத்துடன் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் வருவாய் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு மாநில அரசிடம் சில கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்தநிலையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையிடம் தமிழக அரசு நேரடியாக ஒப்பந்தம் போட்டு உள்ளது. அதன்படி 2-வது திட்டத்திற்கு ரூ.20 ஆயிரத்து 196 கோடி கடன் உதவி செய்ய ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை முன்வந்துள்ளது. அதில் முதல் கட்டமாக ரூ.4 ஆயிரத்து 770 கோடியை வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அத்துடன், மெட்ரோ ரெயில் பணிக்கான அனைத்து பொருட் களையும் தங்களிடமே வாங்க வேண்டும் என்று ஜப்பான் நிறுவனம் மாநில அரசுக்கு நிபந்தனை விதித்து உள்ளது. மத்திய அரசு 20 சதவீதம் பங்களிப்பு செலுத்தவில்லை என்றால் அதுவும் மாநில அரசுக்கு சுமையாக வந்து சேரும் என்று மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:-
சென்னையில் நடைபெற உள்ள 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்திலும் மத்திய அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம். பயணிகளை கவருவதற்காக பல்வேறு வசதிகளை ரெயில் நிலையங்களில் ஏற்படுத்தி கொடுத்து உள்ளோம்.
மெட்ரோ ரெயில் ஏ.ஜி-டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே இயக்கப்பட்டால் நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பயணிகள் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story