கத்தை, கத்தையாக கார்டுகளுடன் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முயன்றவர் சிக்கினார் போலீசார் விசாரணை
கத்தை, கத்தையாக கார்டுகளுடன் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முயன்றவர் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி கண்டோன்மெண்ட் சேவா சங்கம் அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று காலை ஒருவர் ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க முயன்றார். அப்போது அந்த பகுதியில் நடைபயிற்சி சென்ற அந்த வங்கியின் கிளை மேலாளர் திருவேங்கடம், ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தார். அங்கு பணம் எடுத்து கொண்டிருந்தவரின் நடவடிக்கையில் வங்கி கிளை மேலாளர் சந்தேகமடைந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுருந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துக்கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்த ராமலிங்கம்(வயது54) என்பது தெரியவந்தது. அவரது கையில் கத்தை, கத்தையாக ஏ.டி.எம். கார்டுகளை வைத்திருந்தார்.
இதையடுத்து அந்த கார்டுகளுடன் அவரை பிடித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில், இலங்கை தமிழர் ஒருவர் அந்த கார்டுகளை கொடுத்ததாகவும், அதில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தால் கமிஷன் கொடுப்பதாக தெரிவித்ததாகவும், அதனால் பணம் எடுக்க வந்ததாகவும் கூறியுள்ளார். அவரிடம் இருந்து 44 ஏ.டி.எம். கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த இலங்கை தமிழர் யார்? எனவும், ராமலிங்கம் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டுகள் எந்தெந்த வங்கிகளுக்குரியது, அவை உண்மையான கார்டுகளா? போலியானவையா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் கும்பல் ஒன்று போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருட முயன்றபோது கண்டோன்மெண்ட் போலீசாரிடம் சிக்கினர். அந்த கும்பலிடம் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் அதே கும்பல் திருச்சியில் நடமாட தொடங்கி உள்ளதா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story