சர்ச்சை காட்சிகள் : ‘தாக்கரே’ படத்துக்கு யாரும் தடை விதிக்க முடியாது சஞ்சய் ராவுத் எம்.பி. பேச்சு


சர்ச்சை காட்சிகள் : ‘தாக்கரே’ படத்துக்கு யாரும் தடை விதிக்க முடியாது சஞ்சய் ராவுத் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 27 Dec 2018 5:30 AM IST (Updated: 27 Dec 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

‘தாக்கரே’ படத்துக்கு யாரும் தடை விதிக்க முடியாது என சஞ்சய் ராவுத் எம்.பி. தெரிவித்தார்.

மும்பை,

மறைந்த சிவசேனா கட்சியின் நிறுவன தலைவர் பால் தாக்கரேயின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, அக்கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவுத் எம்.பி. “தாக்கரே” என்ற படத்தை தயாரித்துள்ளார். அவரே திரைக்கதை எழுதி உள்ளார்.

இந்த படத்தில் நவாசுதீன் சித்திக் பால் தாக்கரே வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அயோத்தி சம்பந்தமான காட்சிகள் மற்றும் தென் இந்தியர்கள் குறித்த சில காட்சிகளுக்கு சினிமா தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சஞ்சய் ராவுத் பேசியதாவது:-

எது சரி, எது சரியில்லை என்பதை யார் முடிவு செய்வது? இந்த படம் ஒரு வாழ்க்கை வரலாறு, உண்மையான கதை. பால் தாக்கரேயின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். தணிக்கை வாரியம் இதை புரிந்துகொள்ள வேண்டும். சில விஷயங்களை புரிந்துகொள்ள சிறிது நேரம் தேவைப்படும்.

50 ஆண்டுகளுக்கு முன்பு பாலாசாகேப் பால்தாக்கரே மண்ணின் மைந்தர்கள் குறித்து பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய பிரதேசத்தினர் தற்போது மண்ணின் மைந்தர்கள் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர்.

1960-ம் ஆண்டுகளில் மராத்தி இளைஞர்களின் வேலைகளை தட்டிப்பறித்த தென் இந்தியர்களுக்கு எதிராக பால் தாக்கரே குற்றம் சாட்டினார். அவர் முஸ்லிம்களுக்கு எதிராக கருந்துகளால் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுள்ளார். பால்தாக்கரே பற்றி தான் படத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

இந்த படத்துக்கு யாரும் தடை விதிக்க முடியாது. தணிக்கை வாரியம் இந்த படத்தில் வெட்டுகளுக்கு பரிந்துரைக்கிறதா என்பது பற்றி இன்னும் அறிவிக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இதுபற்றி கூறுகையில், “எது நடந்ததோ அது நடந்துவிட்டது. யாரும் அதை மாற்ற முடியாது. இந்த திரைப்படம் தொடர்பாக விரைவாக முடிவு எடுக்க முடியாவிட்டாலும், பாபர் மசூதி விவகாரத்தில் விரைவில் தீர்வுகாண்பதே மேலானதாக இருக்கும்.

2 மணி நேரம் மட்டுமே ஓடும் இந்த படத்தில் என் தந்தையுடன் வாழ்ந்த 52 ஆண்டுகளை காணமுடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் நவாசுதீன் சித்திக் கூறுகையில், இந்த படத்தில் நடிப்பது சவாலாக இருந்தது என்றார்.

Next Story