ஆத்தூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி மறியல்-முற்றுகை; 62 பேர் கைது


ஆத்தூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி மறியல்-முற்றுகை; 62 பேர் கைது
x
தினத்தந்தி 26 Dec 2018 11:30 PM GMT (Updated: 26 Dec 2018 10:44 PM GMT)

ஆத்தூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி மறியல், முற்றுகையில் ஈடுபட்ட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி கிராமத்தில் தளவாய்ப்பட்டி பிரிவு ரோடு மங்கான் காடு என்ற இடத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. புற வழிச்சாலையில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை மூடக்கோரியும், சேலம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொத்தாம்பாடி பஸ் நிறுத்தம் அருகே மாநில துணை பொதுச்செயலாளர் பி.என்.குணசேகரன், கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.பி.நடராஜன், பச்சமுத்து, அழகேசன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் மற்றும் அந்த பகுதி பெண்கள் பலரும் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அந்த பாதையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக மதுக்கடை இருக்கும் மங்கான் காடு பகுதிக்கு சென்றனர். அங்கு அவர்கள் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்டு கடையை மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய, 30 பெண்கள் உள்பட 62 பேரை கைது செய்து கொத்தாம்பாடியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story