விருத்தாசலம் அருகே, காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா - திருமணமான 6 மணி நேரத்தில் தாலியை கழற்றிவிட்டதாக புகார்
விருத்தாசலம் அருகே காதல் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். திருமணமான 6 மணி நேரத்தில் தாலியை கழற்றி விட்டதாக அவர் புகார் கூறினார்.
விருத்தாசலம்,
சிதம்பரம் அருகே உள்ள சாக்காங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன். இவருடைய மகள் சிலம்பொலி(வயது 25). 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ள இவர், விருத்தாசலம் அருகே சின்னகண்டியாங்குப்பம் கிராமத்தில் உள்ள தனது தோழிகள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்று வந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக நேரிலும், செல்போனிலும் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி செல்லதுரையும், சிலம்பொலியும் முதனை செம்புலிங்க அய்யனார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை அவர்களது நண்பர்களும், தோழிகளும் நடத்தி வைத்தனர். பின்னர் இருவரும் தங்களது வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை சிலம்பொலி, தனது காதல் கணவர் செல்லதுரை வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திருமணத்தின் போது செல்லதுரையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கையில் வைத்திருந்தார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நானும், செல்லதுரையும் காதலித்து கடந்த 12-ந் தேதி முதனை கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் இருவரும், ஒரு காரில் ஏறி தஞ்சாவூருக்கு புறப்பட்டோம். அந்த சமயத்தில் எனது கணவரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உங்களது தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார் என்று கூறினார்.
உடனே செல்லதுரை எனது தாலியை கழற்றினார். அதற்கு நான் திருமணமான 6 மணி நேரத்தில் தாலியை கழற்றி விட்டீர்களே என்று கதறினேன். அதற்கு அவர், எனது தாயை பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதையடுத்து நான், விருத்தாசலத்தில் உள்ள எனது தோழி வீட்டிற்கு சென்று தங்கினேன். பலமுறை எனது கணவரின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தும், அவர் எடுக்கவில்லை. எனவே கடந்த 20-ந் தேதி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால்தான் எனது கணவர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ளேன். என்னை கணவருடன் சேர்த்து வைக்கும் வரை, போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, சிலம்பொலியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story