திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தால் வங்கி பணிகள் முடங்கின - ரூ.700 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு


திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தால் வங்கி பணிகள் முடங்கின - ரூ.700 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2018 11:27 PM GMT (Updated: 26 Dec 2018 11:27 PM GMT)

9 தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்தத்தால் வங்கி பணிகள் முடங்கின. அதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.700 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

“மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். சிறிய வங்கிகளை இணைக்கக் கூடாது” என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 21-ந் தேதி நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வங்கி அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகளில் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கின. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை ஸ்டேட் வங்கியின் தலைமை கிளை அலுவலகம் முன்பு வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இது குறித்து வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 260 பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த சுமார் 1500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் வரைவோலை எடுத்தல், காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட எந்தவிதமான பண பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை. இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ.700 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது” என்றனர்.


Next Story