குடியாத்தம் அருகே 3–வது நாளாக காட்டு யானைகள் அட்டகாசம் மாமரங்கள், வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தின


குடியாத்தம் அருகே 3–வது நாளாக காட்டு யானைகள் அட்டகாசம் மாமரங்கள், வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தின
x
தினத்தந்தி 27 Dec 2018 10:30 PM GMT (Updated: 27 Dec 2018 1:46 PM GMT)

குடியாத்தம் அருகே 3–வது நாளாக 20 காட்டு யானைகள் மாமரங்கள், வாழைத்தோட்டங்களை சேதப்படுத்தி உள்ளது.

குடியாத்தம், 

குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள நிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் இப்பகுதியை ஒட்டியபடி ஆந்திர மாநில எல்லைப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது.

அங்கிருந்து 3 குட்டி யானைகள் உள்பட 20 யானைகள் கொண்ட கூட்டம் தமிழக எல்லைக்குள் வந்து கிராமப்புற பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக கொட்டமிட்டா பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பல லட்ச ரூபாய் மதிப்பிலான மாமரங்களையும், வாழைத் தோட்டங்களையும் சேதப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் 3–வது நாளாக நேற்று அதிகாலையில் மோடிக்குப்பம் கிராம குடியிருப்புக்கு அருகே வந்த காட்டு யானைகள் அங்கிருந்த சீனிவாசன், பன்னீர்செல்வம், விட்டல் ஆகியோரது வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து சுமார் 200 வாழை மரங்களை சேதப்படுத்தின. அங்கிருந்த தக்காளி தோட்டத்தையும் நாசம் செய்தது.

அதேபோல் கொட்டமிட்டா பகுதியில் பாலாஜி, ராஜகோபால், பத்மநாபன், பேபி ஆகியோரது மாந்தோப்பிற்குள் புகுந்து ஏராளமான மாமரங்களை நாசமாக்கியது. விவசாயிகள் தொடர்ந்து சேதத்தால் பெருத்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் சேவாசிங், மாவட்ட வனஅலுவலர் பார்கவிதேஜா ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு வனச்சரகத்தை சேர்ந்த 25 வன ஊழியர்கள் கூட்டாக இணைந்து பட்டாசுகளை வெடித்தும், மேளங்கள் அடித்தும், கார்பைட் கல் கொண்டு துப்பாக்கி போன்ற எந்திரத்தை வைத்து வெடிசத்தம் எழுப்பியும் யானை கூட்டத்தை ஆந்திர வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story