தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 28 Dec 2018 4:15 AM IST (Updated: 27 Dec 2018 9:27 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு தொலைநோக்கு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, என்று அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். தனித்துணை கலெக்டர் அஜய்சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் லட்சுமி, பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாக்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு அரூரில் புதிய குடும்ப அட்டைகள், தொகுப்புவீடுகள் பழுது பார்க்கும்பணி, முதல்–அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்குதல் என மொத்தம் 923 பயனாளிகளுக்கு ரூ.1.56 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டியில் 839 பயனாளிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாக்களில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:–

தமிழக அரசு பல்வேறு வகையான தொலைநோக்கு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. இலவச வீட்டுமனைபட்டாக்களை வழங்கி அதில் இலவசமாக வீடுகட்டவும் நிதி ஒதுக்கீடு செய்வதோடு தொகுப்பு வீடுகளை பழுதுபார்க்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை பயனாளிகள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிக அளவில் பகுதிநேர ரே‌ஷன்கடைகள் தர்மபுரி மாவட்டத்தில்தான் உள்ளன. அரூர் பகுதியில் திருமண நிதிஉதவி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் அரூர் வட்டாரத்தில் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்காத பகுதிகளில் 158 ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித்துறை மூலம் அரூர் மற்றும் மொரப்பூர் பகுதிகளில் 117 பணிகளை மேற்கொள்ள ரூ.44 கோடியே 34 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை, குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான 293 பணிகளுக்கு ரூ.8 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்த விழாக்களில் முன்னாள் எம்.எல்.ஏ. குப்புசாமி, அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் விசுவநாதன், உதவி கலெக்டர்(பொறுப்பு) முத்தையன், அரசு வக்கீல் பசுபதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் கோவிந்தசாமி, சிவப்பிரகாசம் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story