உறவினர்களுடன் குளித்தபோது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர் அடித்து செல்லப்பட்டார் தேடும் பணி தீவிரம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உறவினர்களுடன் குளித்த கல்லூரி மாணவர் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
பென்னாகரம்,
இதுபற்றிய விவரம் வருமாறு:–
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவேடந்தன்பட்டியைச் சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மகன் நவீன் (வயது 18). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நவீன் மற்றும் அவருடைய உறவினர்கள் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். பின்னர் ஊட்டமலை பரிசல்துறைக்கு வந்தனர்.
அங்குள்ள ஆற்றில் அவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நவீன் காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார். இதை பார்த்த உறவினர்கள் சத்தம் போட்டனர். ஆனால் ஆற்று தண்ணீரில் அவர் மூழ்கடிக்கப்பட்டு இழுத்து செல்லப்பட்டார்.
இதுபற்றி ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடும் பணியை தீவிரப்படுத்தினர். தீயணைப்பு துறையினர், பரிசல் ஓட்டுனர்கள் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதுபற்றி ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.