சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை


சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை
x
தினத்தந்தி 28 Dec 2018 4:15 AM IST (Updated: 27 Dec 2018 9:37 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிளாஸ்டிக் தடை மற்றும் மாற்று பொருட்கள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கை மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்று சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் பிளாஸ்டிக் தடை மற்றும் மாற்று பொருட்கள் கையாளுதல் குறித்து திட்ட விளக்கவுரையாற்றினார்.

இந்த கருத்தரங்கில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு போன்றவற்றின் அவசியம் கருதி, வணிகர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தினை உடனடியாக தவிர்த்து, வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பொருட்களான வாழை இலை, பாக்குமர பட்டை, பேப்பர் ரோல், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோக டம்ளர்கள், சணல் பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவமாறு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கருத்தரங்கின் போது, பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பைகளை கையில் எடுப்போம், சுற்றுச்சூழல் காப்போம், துயரில்லா வாழ்வு அமைப்போம் என்ற வாசகத்துடன் கூடிய துணிப்பைகளை மாவட்ட கலெக்டர் அறிமுகம் செய்து, பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், வணிகர்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் ரமேஷ், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் செல்வகணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரசன்ன வெங்கடேசன், பாலாஜி, கிருஷ்ணகிரி சிறு தொழில் முன்னேற்ற சங்க தலைவர் ஏகாம்பவாணன், வணிகர் சங்க தலைவர் கேசவன், அரசுத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Next Story