நாமக்கல்லில் வேளாண் கருத்தரங்கு- கண்காட்சி கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.
நாமக்கல்,
நாமக்கல் பாவை மகாலில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் விதத்தில் ‘வேளாண் திருவிழா’ என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடந்தது. அதை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் நோக்கத்தோடும் மிகக்குறைந்த செலவில் பல்வேறு தொழில்நுட்பங்கள் அடங்கிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், வேளாண் துறையின் மூலம் செயற்கை உரங்களை தவிர்த்து, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உரங்கள், பூச்சி மருந்துகள் உபயோகிக்க விவசாயிகள் ஊக்கப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் பயிர் உற்பத்தி செய்து அதிக லாபம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் வேளாண்மை துறையின் மூலம் உடனடியாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் இங்கு அமைக்கப்பட்டு உள்ள வேளாண் கண்காட்சியை பார்வையிட்டு, அதை விவசாயத்திற்கு ஏற்ற வகையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் அகிலா, வேளாண்மை இணை இயக்குனர் சேகர், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மோகன், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் (உழவியல்) முருகன், அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story