உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதாக 172 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு ரூ.72 லட்சம் அபராதம் வசூல்
சேலம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதாக இந்த ஆண்டில் 172 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.72 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள், ஜவ்வரிசி ஆலைகள், வெல்லம் உற்பத்தி செய்யப்படும் ஆலைகள் என அனைத்து நிறுவனங்களிலும் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்துகின்றனர்.
அப்போது பொருட்களில் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டில் கலப்படம், தப்புகுறியீடு, தரம்குறைவு என உணவு பாதுகாப்புத்துறை விதிகளை மீறியதாக 172 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.72 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறோம். இந்த ஆண்டில் இதுவரை ரூ.15 லட்சம் மதிப்பில் 40 ஆயிரம் கிலோ வெல்லம் மற்றும் ரூ.35 லட்சம் மதிப்பில் 2 ஆயிரத்து 30 மூட்டை சர்க்கரை, ரூ.36 லட்சம் மதிப்பில் 1,600 மூட்டை ஜவ்வரிசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 6 ஆயிரம் லிட்டருக்கு மேல் கலப்பட எண்ணெய்யும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர ரூ.24 லட்சம் மதிப்பில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்துள்ளோம். இந்த ஆண்டில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மீறியதாக 172 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளோம். மேலும் அபராதமாக ரூ.72 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story