புத்தாண்டையொட்டி பட்டாசு வெடிக்க தடை ஆனைமலை புலிகள் காப்பகம் 2 நாட்கள் மூடப்படுகிறது - வனத்துறை அதிகாரிகள் தகவல்
புத்தாண்டையொட்டி வனப்பகுதியில் பட்டாசு வெடிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மேலும் ஆனைமலை புலிகள் காப்பகம் 2 நாட்கள் மூடப்படுகிறது.
பொள்ளாச்சி,
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானை, புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, கரடி, மான், குரங்குகள் உள்ளன. மேலும் பல்வேறு அரிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்களும் உள்ளன.
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வால்பாறை, மானாம்பள்ளி, அமராவதி, உடுமலை வனச்சரகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வெளிமாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.சுற்றுலா பயணிகள் வசதிக்காக அனைத்து வனச்சரகங்களில் வனத்துறை தங்கும் விடுதிகள் உள்ளன. இதற்கான அறைகள் முன்பதிவு ஆன்- லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் புத்தாண்டையொட்டி ஆனைமலை புலிகள் காப்பகம் 2 நாட்கள் மூடப்படுகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் டாப்சிலிப், அட்டகட்டி, அப்பர் ஆழியாறு, சிறுகுன்றா, மானாம்பள்ளி, அமராவதி, சின்னாறு ஆகிய இடங்களில் மொத்தம் 60 தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புத்தாண்டையொட்டி வனப்பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இரவு நேரத்தில் சத்தம் போடுவது, பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட செயல்களில் சுற்றுலா பயணிகள் ஈடுபடக்கூடும். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டையொட்டி 31 மற்றும் 1-ந்தேதி புலிகள் காப்பக பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு, காப்பகம் மூடப்படுகிறது. இதன் காரணமாக அந்த 2 நாட்கள் தங்கும் விடுதிகள் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் பொள்ளாச்சி வனச்சரகத்தில் உள்ள குரங்கு நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்லலாம். மேலும் வால்பாறை செல்பவர்களுக்கு சோதனைச்சாவடியில் அனுமதி அளிக்கப்படும். ஆனால் சேத்துமடை சோதனைச்சாவடியில் இருந்து டாப்சிலிப் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story