ஜனவரி 1-ந் தேதி முதல் வாடகை வாகன வரியை ஆன்லைனில் செலுத்த வேண்டும் - வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்
வாடகை வாகன வரியை ஜனவரி 1-ந் தேதி முதல் ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்று ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் கூறினார்.
ஊட்டி,
ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மினி பஸ், சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் தலைமை தாங்கி பேசியதாவது:-
அனைத்து சுற்றுலா வாகனங்கள் மற்றும் மினி பஸ்கள், சரக்கு லாரிகள், தனியார் பஸ்களுக்கான வரியினங்களை ஜனவரி 1-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக செலுத்த முடியாது. எனவே அரசின் புதிய உத்தரவை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் மட்டுமின்றி சுற்றுலாத்தலங்கள் நிறைந்த பகுதி என்பதால் வாகன டிரைவர்கள் சுற்றுலா பயணிகளிடம் பண்பாக நடந்து கொள்ள வேண்டும். வாகன டிரைவர்கள் கண்டிப்பாக சீருடை அணிய வேண்டும். நியாயமான வாடகை தொகையை மட்டுமே வசூலிக்க வேண்டும். மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். அதிகவேகத்தில் ஓட்டக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள்ஆன்லைன் மூலம் வரிகளை செலுத்துவது தொடர்பாக தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
போக்குவரத்து வாகனங்களை இயக்குவதில் அரசு புதிய நடைமுறைகளை அமல்படுத்தி உள்ளது. இதற்காக புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1-ந் தேதி முதல் சுற்றுலா வாகனங்கள், டாக்சி, மினி பஸ்கள், சரக்கு லாரிகள், வேன்கள், ஆட்டோக்கள், ஜீப்புகள், சரக்கு ஆட்டோக்கள் உள்பட வாடகைக்கு இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் ஆண்டுதோறும் செலுத்தப்படும் வரிகளை இனிமேல் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
வாகன காப்பீடு, மாசு கட்டுப்பாடு சான்றிதழ், உரிமம், வாகன உரிமம் சான்று புத்தகம், உரிமையாளரின் பெயர், அவரது தொலைபேசி எண், வாகன எண் என அனைத்து விபரங்களும் இடம் பெற்று இருக்கும். இதனை சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் ஆன்-லைனில் முறையாக பதிவு செய்ய வேண்டும். வாகன எண்ணை ஆன்- லைனில் குறிப்பிட்ட உடனே அதன் முழு விபரங்கள் திரையில் காண்பித்து விடும்.
மேலும் மாசு கட்டுப்பாடு சான்றிதழ், காப்பீடு சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். வாகனத்துக்கு செலுத்த வேண்டிய வரியை அதன் உரிமையாளர் வீட்டில் இருந்தபடியே இணையதள வங்கி மூலம் பணபரிவர்த்தனை செய்து செலுத்தி கொள்ளலாம்.
டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு எந்த தேதியில் வர வேண்டும் என்ற விபரத்தையும் உடனடியாக அதில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story