கதிர்வீச்சால் பறவைகள் பாதிக்கப்படும் எனக்கூறி செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம் பெருந்துறை அருகே பரபரப்பு
பெருந்துறை அருகே கதிர்வீச்சால் பறவைகள் பாதிக்கப்படும் எனக்கூறி செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெருந்துறை,
பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி ஆசிரியர் குடியிருப்பு. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். முற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத இடத்தில் இந்த பகுதி அமைந்து உள்ளது. இதனால் இங்குள்ள மரங்களில் ஏராளமான தூக்கனாங் குருவிகள், கொக்குகள் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அந்த பகுதியில் தூக்கனாங் குருவிகள் மிக அதிக அளவில் கூடு கட்டி இருக்கும் பனை மரத்துக்கு மிக அருகில் இந்த செல்போன் கோபுரம் அமைக்க அஸ்திவாரம் தோண்டப்பட்டு வருகிறது.
இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு குடியிருப்பின் நுழைவு வாயில் பகுதிக்கு நேற்று காலை வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தங்களுடைய கையில் பதாகைகளை ஏந்தியபடி கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்- இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இங்கு செல்போன் கோபுரம் அமைத்தால், அதில் இருந்து வரும் கதிர்வீச்சால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறோம்,’ என்றனர்.
இதற்கு போலீசார் பதில் அளிக்கையில், ‘முறையான அனுமதியின்றி கூட்டம் கூடுவதோ, போராட்டம் நடத்தவோ கூடாது,’ என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது அவர்கள், ‘போலீஸ் துறையிடம் முறையாக அனுமதி பெற்று எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவோம்,’ என போலீசாரிடம் தெரிவித்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story