கொடைக்கானலில் ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை - கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்
கொடைக்கானலில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக வைத்திருந்த கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் மூஞ்சிக்கல் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சுகாதாரமின்றி உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ‘வாட்ஸ் அப்’ மூலம் புகார் வந்தது. அதன்பேரில் நேற்று காலை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் அந்த ஓட்டலில் திடீரென சோதனை நடத்தினர்.
அப்போது இரவு நேரத்தில் சமைக்கப்பட்டு வைத்திருந்த உணவுகள் மற்றும் கெட்டுப்போன கோழி இறைச்சிகளையும், காலாவதியான மசாலா பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் அங்கு பொதுமக்களுக்கு பரிமாறப்பட்ட உணவுகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஓட்டல் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவை சுகாதார முறையில் சமைத்து வழங்க வேண்டும் என்றும், மீண்டும் தவறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ஓட்டலின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் பயணிகள் ஓட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர். ஆனால் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் வினியோகம் செய்வதால் சுற்றுலா பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே கொடைக்கானல் முழுவதும் உள்ள ஓட்டல்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story