குத்தாலம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் கடத்தி கொலை? கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை
குத்தாலம் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என்று கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்,
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள தொழுதாலங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக்(வயது 40). இவர், கும்பகோணத்தில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் பணம் கொடுத்த சிலரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்காமல் காலதாமதம் செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தேரழந்தூர் பஸ் நிறுத்தத்தில் அசோக் தனது நண்பர்கள் சதீஷ்குமார், பாண்டியன் ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் திருவிடைமருதூர் தாலுகா மரத்துறையை சேர்ந்த சரவணன் (33), கொள்ளிடத்தை சேர்ந்த சிவா மற்றும் 2 பேர் வந்தனர். அதில் சரவணன், வெளிநாடு செல்ல வாங்கிய பணம் தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி அசோக்கை தனியாக அழைத்தார். இதனையடுத்து அசோக், சரவணனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமாருக்கும், அசோக்கின் தந்தை அன்பழகனுக்கும் செல்போனில் பேசிய சரவணன், அசோக்கிற்கு உடல்நிலை சரியில்லை. எனவே குத்தாலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறி உள்ளார். அதன்பேரில் அன்பழகன், சதீஷ்குமார் மற்றும் சிலர், சரவணன் கூறிய தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர்.
அங்கு அசோக் மயங்கிய நிலையில் கிடந்தார். ஆனால் போனில் தகவல் கொடுத்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் யாரும் அங்கு இல்லை. இதனை தொடர்ந்து அசோக்கை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அசோக் பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் நேற்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து அசோக்கின் உடலை அவரது உறவினர்களிடம் கொடுக்க முயன்றபோது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். மேலும், அசோக்கை கடத்தி சென்று அடித்து துன்புறுத்தி கொலை செய்து இருக்கலாம் என்றும், அதனால் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அசோக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து அங்கு சென்ற மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனையடுத்து அசோக்கின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து குத்தாலம் போலீசார், அசோக்கை கடத்தி சென்றதாகவும், அவரது சாவுக்கு காரணமாக இருந்தாகவும் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், அசோக் கடத்தி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதாவது காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story