நாகை கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறையை வருவாய்த்துறை அலுவலர்கள் முற்றுகை போலீசாருக்கும்-போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
நாகை கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறையை வருவாய்த்துறை அலுவலர்கள் முற்றுகையிட்டனர். இதில் போலீ சாருக்கும்-போராட்ட காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிரேம்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளவரசன், பொருளாளர் பிச்சைப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைத்தலைவர் சோமசுந்தரம் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர் ஊரில் இல்லாத போது வருவாய்த்துறையில் இட மாறுதல் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் 2017-18-ம் ஆண்டிற்கான சிறப்பு மிகை ஊதியமாக (பொங்கல் போனசாக) ரூ.3 ஆயிரமும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனசாக ஒரு மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது போராட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டகாரர்கள் போலீசாரின் தடுப்பை மீறி கலெக்டர் அலுவலகம் முதல் தளத்தில் உள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அறையை முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story