ராமேசுவரத்தில் ஆட்டோவில் கடத்தி வந்த 1,008 மதுபாட்டில்கள் பறிமுதல் - 3 பேருக்கு வலைவீச்சு
ராமேசுவரத்தில் அனுமதியின்றி எடுத்து வரப்பட்ட 1008 மதுபாட்டில்களையும், சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட தீவு பகுதியில் மொத்தம் 12 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரத்தில் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ராமேசுவரம், தங்கச்சிமடத்தில் செயல்பட்டு வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் அகற்றப்பட்டன. பாம்பனில் 2 கடைகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. ராமேசுவரம், தங்கச்சிமடத்தில் மதுக்கடைகள் இல்லாததால் இப்பகுதிகளை சேர்ந்த மதுப்பிரியர்கள் பாம்பனுக்கு சென்று மது அருந்தி வந்தனர்.
இதனை பயன்படுத்தி ராமேசுவரத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற தொடங்கியது. இவ்வாறு ரெயில் நிலையம், பஸ் நிலையம், ராமதீர்த்தம், வேர்க்கோடு, தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், துறைமுகம் பகுதி உள்பட 250-க்கும் மேற்பட்ட இடங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவர்கள் அவ்வப்போது போலீசில் பிடிபட்டாலும் தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை துறைமுகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்குச்சாமி தலைமையிலான போலீசார் தனுஷ்கோடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் அந்த ஆட்டோவில் இருந்த 3 பேர் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.
இதையடுத்து போலீசார் ஆட்டோவை சோதனையிட்டதில் அட்டை பெட்டிகளில் 1008 மதுபான பாட்டில்கள் இருந்தன. அதனைத் தொடர்ந்து அந்த மதுபாட்டில்களையும், ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களில் ஒருவர் பாம்பனை சேர்ந்த மலைச்சாமி என்பது மட்டும் அடையாளம் தெரிந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story