ஜல்லிக்கற்கள் ஏற்ற, இறக்குவதற்கு வசதியாக தஞ்சை ரெயில் நிலையத்தில், மேலும் 2 இடங்களில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி சாலையின் குறுக்கே ‘கேட்’டும் அமைக்கப்படுகிறது
தஞ்சை ரெயில் நிலையத்தில், மேலும் 2 இடங்களில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கற்கள் ஏற்ற, இறக்குவதற்கு வசதியாக இந்த தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தண்டவாளம் அமைக்கப்படும் இடத்திற்கு குறுக்கே சாலை செல்வதால் அதில் ரெயில்வே ‘கேட்’டும் அமைக்கப்படுகிறது.
தஞ்சாவூர்,
தஞ்சை ரெயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்த ரெயில் நிலையம் ஆகும். திருச்சி-விழுப்புரம் ரெயில் பாதை அமைக்கும் முன்பு தஞ்சை வழியான ரெயில்வே வழித்தடம் தான் மெயின் லைனாக இருந்துள்ளது. இந்த வழியாகத்தான் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும், அதே போல் தென் மாவட்டங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டன.
நாளடைவில் திருச்சி-விழுப்புரம் இடையேயான ரெயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டு அந்த வழியாக அதிக அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக தஞ்சை ரெயில் நிலையம் தான் ‘ஏ’ கிரேடு ஆகும். இந்த ரெயில் நிலையத்தில் பயணிகள் செல்வதற்கான சுரங்கப்பாதை 1 முதல் 3-வது நடைமேடை வரை உள்ளது. மேலும் தற்போது நகரும் படிக்கட்டுகளும் 1-வது, 3-வது நடைமேடையில் அமைக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து விட்டன. விரைவில் அது பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தஞ்சை ரெயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. 7 தண்டவாளங்கள் உள்ளன. இதில் 1 முதல் 5 தண்டவாளங்கள் வரை பயணிகள் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்று வருகின்றன. 6, 7-வது தண்டவாளங்கள் சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. தஞ்சை தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்பதால் இங்கிருந்து சென்னை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், திருவள்ளூர், திருநெல்வேலி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு நெல், அரவைக்காக அனுப்பி வைக்கப்படும்.
இதே போல மத்திய தொகுப்பில் இருந்து தஞ்சைக்கு ரெயிலில் அரிசி மூட்டைகள் வரும். இது தவிர கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு ரெயிலில் உர மூட்டைகளும் வரும். வாரத்தில் ஒரிரு நாட்களை தவிர மற்ற நாட்களில் சரக்கு ரெயில் பயன்பாடு இருக்கும். தஞ்சை ரெயில் நிலையத்தின் அருகே ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஜல்லிக்கற்களும் குவியல், குவியலாக இருப்பு வைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு தண்டவாளம் அமைக்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இவ்வாறு தஞ்சைக்கு ஜல்லிக்கற்கள் வரும்போதும், கொண்டு செல்லும்போதும், சரக்கு ரெயில்கள் நிற்பதாலும், ஜல்லிக்கற்கள் இறக்கும் போது சரக்கு ரெயில்கள் வருவதாலும் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக ஜல்லிக்கற்கள் ஏற்ற, இறக்குவதற்காக 2 தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 7-வது தண்டவாளத்தை இணைக்கும் வகையில் இந்த தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக கான்கிரீட் தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டு ஒரு பகுதியில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் தண்டவாளம் அமைப்பதற்காக பொக்லின் எந்திரம் மூலம் மண் தோண்டும் பணிகள், சிலீப்பர் கட்டைகள் கொண்டு செல்லும் பணிகள் போன்றவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 300 மீட்டர் நீளத்திற்குள் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த தண்டவாளம் செல்லும் பகுதியின் குறுக்கே சாலை உள்ளது. இந்த சாலை பகுதியில் தண்டவாளம் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இந்த சாலையில் தண்டவாளம் செல்லும் பகுதியில் ரெயில்வே ‘கேட்’டும் அமைக்கப்படுகிறது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story