தோட்டா பாயாது... உயிர்ப்பலி இல்லை... கலவரத்தை கட்டுப்படுத்த நவீன ரக துப்பாக்கி தூத்துக்குடி துப்பாக்கி சூடு பாதிப்பில் என்ஜினீயரின் புதிய கண்டுபிடிப்பு
தோட்டா பாயாமல், உயிர்ப்பலி இன்றி கலவரத்தை கட்டுப்படுத்த நவீன ரக துப்பாக்கியை என்ஜினீயர் புதிதாக கண்டுபிடித்துள்ளார்.
தஞ்சை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாலாஜி நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் சரவணன்(வயது 26). ரஷியாவில் என்ஜினீயரிங் பட்டம் பெற்ற இவர், உயிர்ப்பலிகள் இன்றி கலவரத்தை கட்டுப்படுத்த புதிய ரக துப்பாக்கியை கண்டுபிடித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த கலவரத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பில் இந்த கருவியை உருவாக்கியதாக சரவணன் கூறுகிறார்.
7 அடி நீளம் கொண்ட இந்த துப்பாக்கியை இயக்கும் முறை குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நேற்று கும்பகோணத்தில் நடந்தது. அப்போது சரவணன், புதிய கருவியை இயக்கி காண்பித்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சிறு வயது முதல் புதிய தொழில்நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்து வருகிறேன். இதன் பலனாக ரஷியாவில் உள்ள உக்ரைன் பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்ற “அவனிக்ஸ்” என்ற தொழில்நுட்ப பாட பிரிவில் என்ஜினீயரிங் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் பட்டம் பெற்றேன்.
பல நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் நான் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்தி வருகிறேன். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலர் இறந்தது மனதளவில் என்னை பாதித்தது.
இனி இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று நினைத்து, உயிர் பலிகள் இன்றி கலவரத்தை கட்டுப்படுத்தி, அமைதி நிலை திரும்பச்செய்ய ஒரு கருவியை கண்டுபிடிக்க தொடங்கினேன். எனது ஆய்வின் முடிவில் 7 அடி நீளம் கொண்ட புதிய ரக துப்பாக்கியை உருவாக்கி உள்ளேன்.
இதை கையாள்வது எளிது. இந்த துப்பாக்கியில் உருளைக்கிழங்கு, களிமண் ஆகியவற்றை செலுத்தி எலக்ட்ரானிக் முறையிலும், வாயு அழுத்த முறையிலும் இயக்கலாம். 500 மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளை கூட இந்த துப்பாக்கி எளிதாக சுடும். கலவரத்தின்போது உருளைக்கிழங்கு, களிமண் போன்றவற்றால் சுட்டால் உயிர்ப்பலி நேராது. லேசான காயங்கள் மட்டுமே ஏற்படும். கலவரத்தையும் கட்டுப்படுத்த முடியும்.
மத்திய பாதுகாப்பு துறையின் கவனத்துக்கு இந்த துப்பாக்கியை கொண்டு செல்ல உள்ளேன். அதன் மூலம் எனது கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்.
இதுதவிர சிறிய வகை மோட்டார் மூலம் தனிநபர் ஒருவர் வானில் பறந்து செல்லவும் தேவையான தொழில்நுட்பங்கள் என்னிடம் உள்ளன.
25 வகையான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்துள்ளேன். இதை செயல்படுத்த பொருளாதார உதவியும், அரசின் ஒத்துழைப்பும் தேவை.
இவ்வாறு சரவணன் கூறினார்.
Related Tags :
Next Story