அரசு ரத்த வங்கி குறித்து வாட்ஸ்-அப்பில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் பேட்டி
அரசு ரத்த வங்கிகள் குறித்து வாட்ஸ்-அப்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் கூறினார்.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 9 மாத கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
நேற்று அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவக் குழுவினரிடமும் விசாரித்தார். இது தவிர விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற எச்.ஐ.வி. நோயாளியான வாலிபரையும் சந்தித்தார். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கி, எச்.ஐ.வி.க்கு சிகிச்சை அளிக்கும் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிறந்த முறையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏ.ஆர்.டி. மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.
வயிற்றில் உள்ள குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவாத வகையில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. ரத்த வங்கியில் ஏற்பட்ட தவறு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு எங்கு நடந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற சம்பவங்கள் மறைக்கப்படுவதாக கூறுவது தவறானது. அரசு ரத்த வங்கிகள் குறித்து வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிச்சயம் நடக்காது. அரசு ரத்த வங்கிகளுக்கு வரும் ரத்தம் முறையாக பரிசோதிக்கப்படுகிறது. தினமும் ஏராளமான நோயாளிகளுக்கு ரத்த வங்கிகள் மூலம்தான் ரத்தம் வழங்கப்படுகிறது. .
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story