ரெயில் நிலையங்களில் திருட்டு போன ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்
ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பயணத்தின் போது திருட்டு போன ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் ரெயில்வே போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு அவை சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
மானாமதுரை,
மானாமதுரை ரெயில் நிலையத்தில் ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். முன்னதாக ஆய்விற்கு வந்த அவரை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மன்னர் மன்னன், இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் ரெயில்வே போலீசார் வரவேற்றனர்.
பின்னர் மானாமதுரை ரெயில் நிலையம் முழுவதும் ஆய்வு செய்த சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இந்த ஆண்டு ரெயில் பயணிகளிடம் இருந்து திருட்டு போன 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ரெயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு உரியவர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் பாதுகாப்பான பயணத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது ரெயில் நிலையங்களில் இளம்பெண்கள், வாலிபர்கள் ஆகியோர் செல்பி எடுப்பது, செல்போன் பேசியபடி தண்டவாளங்களை கடப்பது, ரெயில் படிக்கட்டில் நின்று கொண்டு செல்போன் பேசியபடி பயணம் செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே துறையில் செல்போன்கள் மூலம் தான் கவனம் சிதறப்பட்டு பல விபத்துகள் நடைபெறுகின்றன. இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரெயில்வே போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு அந்தந்த ரெயில்வே நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் ரெயில் பயணிகளுக்கு ஜி.ஆர்.பி. என்ற மொபைல் ஆப் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ரெயில் பயணத்தின் போது பயணிகளுக்கு ஏதேனும் உதவி தேவை என்றால் ரெயில் நிலையத்தில் உள்ள போலீசார் குறுகிய நேரத்தில் அங்கு உதவி செய்ய வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story