ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் பனீந்திரரெட்டி உத்தரவு


ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் அரசு முதன்மை செயலாளர் பனீந்திரரெட்டி உத்தரவு
x
தினத்தந்தி 28 Dec 2018 3:15 AM IST (Updated: 28 Dec 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன்கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளர் பனீந்திரரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அரசு முதன்மை செயலாளரும், அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குனருமான கே.பனீந்திரரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் ராஜாமணி முன்னிலை வகித்தார்.

ஆய்வுக்கூட்டத்தில், வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களான தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு தானிய உற்பத்தி தி்்ட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அரசு முதன்மை செயலாளர் கேட்டறிந்தார். மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவதையும், ரேஷன் பொருட்களை தரமானதாக வழங்கவும் உத்தரவிட்டார். சுகாதாரத்துறையின் சார்பில், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள் குறித்தும் கேட்டறிந்தார். குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாவட்டத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், அந்த பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் ஸ்ரீரங்கம் துணை கலெக்டர் ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவரூத்ரய்யா, மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவள்ளி மற்றும் வருவாய்த்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story