அறந்தாங்கி, அன்னவாசல், விராலிமலை பகுதிகளில் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


அறந்தாங்கி, அன்னவாசல், விராலிமலை பகுதிகளில் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 28 Dec 2018 3:30 AM IST (Updated: 28 Dec 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கி, அன்னவாசல், விராலிமலை பகுதிகளில் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அறந்தாங்கி,

அறந்தாங்கி அருகே உள்ள கொடிவயல் ஊராட்சியில் 900 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் 402 பேருக்கு மட்டுமே வந்துள்ளது. இந்நிலையில் நிவாரண பொருட்கள் வழங்கினால் அனைவருக்கும் வழங்க வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல அரசர்குளம் கீழ்பாதி பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் எனக்கூறி சுப்புரமணியபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அறந்தாங்கி அருகே உள்ள ஆளப்பிறந்தான் பெருமாள்பட்டி, நாயக்கர்பட்டி, கருவிடைசேரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க கோரி அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் வெள்ளாத்து பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வருவாய் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் புயலால் பாதிப்பு அடையாத பெரும்பாலான குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது எனவும், வருவாய்த்துறை முறையாக கணக்கெடுத்து நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் எனக்கூறி புதுக்கோட்டை-மணப்பாறை சாலையில் பரம்பூர் பஸ் நிறுத்தம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தாசில்தார் சோனை கருப்பையா, அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

விராலிமலை தாலுகா விராலூர் ஊராட்சி கொடிக்கால்பட்டியில் கஜாபுயலில் சேதமடையாத வீடுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டதாகவும், இந்த டோக்கன் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் எனக்கூறி விராலிமலை-புதுக்கோட்டை சாலை கொடிக்கால்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமையாபானு, கிராம நிர்வாக அதிகாரி பொன்னர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Next Story