சிங்காநல்லூரில் துணிகரம், பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்த வாலிபர் - போலீசார் விசாரணை
சிங்காநல்லூரில் பணம் வராத ஆத்திரத்தில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்த வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்காநல்லூர்,
கோவை- திருச்சி ரோடு சிங்காநல்லூரில் வசந்தா மில் பஸ் நிறுத்தம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. அந்த வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள் நேற்று காலை பணிக்கு வந்தனர். அப்போது வங்கிக்கு அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்த எந்திரங்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக கோவை சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தள்ளாடியபடி குடிபோதையில் ஏ.டி.எம். மையத்துக்கு வெளியே கிடந்த பெரிய கல்லை கொண்டு வந்து ஏ.டி.எம். எந்திரத்தை முதலில் உடைத்தார். அதன்பின்னர் அருகில் இருந்த பாஸ் புத்தகத்தில் பதிவு செய்யும் எந்திரத்தையும் அவர் உடைத்த காட்சிகள் பதிவாகியிருந்தன.
ஆனால் அவர் பணத்தை கொள்ளையடிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. பணம் எடுக்க வந்த அந்த ஆசாமி பணம் இல்லாததால் ஆத்திரத்தில் அந்த எந்திரத்தை உடைத்திருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எந்திரங்களை உடைத்ததும் அந்த ஆசாமி வெளியே சென்று விட்டார்.
இதற்கிடையில், கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரமும் உடைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது வசந்தா மில் பஸ் நிறுத்தம் அருகே இருந்த ஏ.டி.எம். மையத்தில் எந்திரங்களை உடைத்த ஆசாமி தான் இங்கும் கல்லை கொண்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் மூலம் தெரியவந்தது.கேமராவில் பதிவாகியிருந்த உருவங்களை வைத்து 2 ஏ.டி.எம். மையங்களிலும் எந்திரங்களை உடைத்த ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். விசாரணையில் ஒரே நபர் தான் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 2 ஏ.டி.எம். மையங்களிலும் எந்திரங்களை உடைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story