புத்தாண்டை முன்னிட்டு களை கட்டிய அய்யலூர் சந்தை - ஆடு, கோழி விலை உயர்வு


புத்தாண்டை முன்னிட்டு களை கட்டிய அய்யலூர் சந்தை - ஆடு, கோழி விலை உயர்வு
x
தினத்தந்தி 28 Dec 2018 3:45 AM IST (Updated: 28 Dec 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டைமுன்னிட்டு அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ஆடு மற்றும் கோழிகளின் விலை உயர்ந்துள்ளது.

வடமதுரை, 

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆட்டுச்சந்தையாக அய்யலூர் திகழ்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெற்று வருகிறது. அய்யலூரை சுற்றியுள்ள வடமதுரை, கடவூர், எரியோடு, காணப்பாடி, எலமனம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனை செய்ய வருகின்றனர்.

ஆடுகளை வாங்குவதற்காக திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். இந்தநிலையில் புத்தாண்டு பண்டிகையையொட்டி நேற்று ஆட்டுச்சந்தை களைகட்டியது.

ஆடு மற்றும் கோழிகளை வாங்க வியாபாரிகள் குவிந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகள், கோழிகளை வாங்கினர். இதனால் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது. நேற்று 10 கிலோ எடை கொண்ட ஒரு வெள்ளாடு ரூ. 3 ஆயிரத்து 800 , நாட்டுக்கோழி கிலோ ரூ.320-க்கும் விற்பனை ஆனது. கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட ஒரு வெள்ளாடு ரூ.3 ஆயிரத்து 500-க்கும், கோழி ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Next Story