குறிஞ்சிப்பாடி அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு


குறிஞ்சிப்பாடி அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
x
தினத்தந்தி 28 Dec 2018 3:45 AM IST (Updated: 28 Dec 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

குறிஞ்சிப்பாடி, 

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் முரளி(வயது 19). இவர் சேப்ளாநத்தத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை முரளி தனது அண்ணன் கணேசமூர்த்தி(25) மற்றும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் பெரிய ஏரி அருகே விளையாடுவதற்காக சென்றார்.

விளையாடி முடித்த பின், 11 மணிக்கு பெரிய ஏரியில் குளிக்கப்போவதாக கூறி முரளி மட்டும் சென்றார். அப்போது ஏரியின் ஆழமான பகுதியில் நீச்சல் அடித்து குளித்து கொண்டிருந்த போது திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கினார். கையை வெளியே நீட்டியபடி, ஏரியில் முரளி மூழ்குவதை பார்த்த கணேசமூர்த்தி மற்றும் அவருடன் வந்திருந்த இளைஞர்கள் சத்தம்போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்தனர். அதற்குள் அவர் முழுவதுமாக உள்ளே மூழ்கிவிட்டார்.

இதுபற்றி குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முரளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி தாசில்தார் விஜயா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோரும் அங்கு வந்தனர்.

சுமார் 2 மணிநேரம் தேடுதலுக்கு பின்னர், சேற்றின் அடியில் சிக்கிக் கொண்டிருந்த முரளியை தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். முரளியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பெரிய ஏரியில் இதுபோன்ற உயிரிழப்பு என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இதுவரைக்கும் 7 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கிறார்கள். இதுபற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை பலகை வைத்து, மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story