கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்று: சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரி அதிரடி ஆய்வு - ரத்த வங்கி ஊழியர்களிடமும் விசாரணை
சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை ஏற்றிய சம்பவத்தை தொடர்ந்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். ரத்த வங்கி ஊழியர்களிடம் விசாரணையும் நடத்தினார்.
சிவகாசி,
சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கி பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் நேற்று மாலை மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுசங்கத்தின் திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் விசாரணை நடத்தினார். 2 மணி நேரத்துக்கு மேலாக பூட்டிய அறையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிவகாசி ரத்த வங்கி பொறுப்பாளர் மற்றும் அலுவலர்கள் தனித்தனியாக பதில் அளித்தனர். ரத்த வங்கியில் உள்ள சில பதிவேடுகளையும் அவர் அதிரடியாக ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணுக்கு ஜனவரி மாதம் பிரசவம் இருக்கலாம். குழந்தை நல்ல முறையில் பிறக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருக்கிறது என்று கண்டுபிடித்து உரிய முறையில் பதிவு செய்யாத ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்தவங்கியில் முழு ஆய்வு நடத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் 131 ரத்த பைகளும், விருதுநகரில் 138 ரத்தபைகளும், அருப்புக்கோட்டையில் 90 ரத்த பைகளும், ராஜபாளையத்தில் 105 ரத்த பைகளும் கையிருப்பு உள்ளது. இந்த பிரச்சினைக்கு பின்னர் இந்த 4 ரத்த வங்கியில் உள்ள ரத்தப்பைகள் அனைத்தும் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த குறைபாடும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. தற்போது அரசு ரத்தவங்கியை தொடர்ந்து தனியார் ரத்த வங்கிகளில் உள்ள ரத்தப்பைகளும் ஆய்வு செய்யப்படும். அரசு ரத்தவங்கியில் உள்ள ரத்தப்பைகள் குறித்து பொதுமக்கள் எந்த அச்சமும்பட தேவையில்லை. தமிழகத்தில் உள்ள ரத்தவங்கிகள் மூலம் தான் ரத்தம் சேகரிக்கப்பட்டு பல்வேறு சிக்கலான நேரங்களில் நோயாளிகளுக்கு ரத்தம் வழங்கப்பட்டு அவர்களை காப்பாற்றி வருகிறோம். சிவகாசி சம்பவத்தை நினைத்து ரத்தவங்கிகள் குறித்து யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.
சாலைவிபத்தில் காயம் அடைந்த பலரை ரத்ததான வங்கிகளில் உள்ள ரத்தம் பெற்று காப்பாற்றி இருக்கிறோம். தமிழகத்தில் தான் தன்னார்வ ரத்ததானம் செய்பவர்கள் அதிகம் உள்ளனர். இந்த பிரச்சினையை முன்வைத்து ரத்ததானத்தை தடுக்க வேண்டும். நாளை (இன்று) ஐவர்குழுவினர் வந்து விசாரணை நடத்த உள்ளனர். அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் யார்? யார்? மீது நடவடிக்கை என்பது குறித்து தெரியவரும். இனிமேல் இதுபோன்ற ஒரு தவறு நடக்காது. மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மருத்துவ துறையை சேர்ந்த அதிகாரிகள் ஜிந்தா, மனோகரன், பழனிச்சாமி, ராம்கணேஷ், திருமுருகானந்தம், அய்யனார், சைலேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story