பாம்பனில் அமையும் புதிய ரெயில் பாலத்தின் மாதிரி வெளியீடு - நவீன தொழில்நுட்பத்தில் உருவாகும் தூக்குப்பாலம்
பாம்பனில் அமையவுள்ள புதிய ரெயில் பாலத்தின் மாதிரி வெளியிடப்பட்டது. இதில் நவீன தொழில்நுட்பத்துடன் தூக்குப்பாலம் லிப்ட் முறையில் உருவாக்கப்பட உள்ளது.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தையும், ராமேசுவரம் தீவை இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது, அங்குள்ள பாம்பன் ரெயில் பாலம். இந்த பாலத்தில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டு பழுதடைந்தது.
இந்த பழுதை சரிசெய்யும் பணியும், பாலத்தை முழுமையாக சீரமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பாம்பன், ராமேசுவரம் இடையே புதிய ரெயில் பாலம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாம்பன்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் தற்போதுள்ள ரெயில் பாலம் அருகிலேயே புதிய ரெயில் பாலம், நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட உள்ளது.
இந்தநிலையில் ரெயில்வே துறை மத்திய மந்திரி பியூஸ் கோயல் முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், புதிதாக அமைக்கப்பட உள்ள ரெயில் பாலம் எவ்வாறு இயங்கும் என்பது குறித்த மாதிரி இடம்பெற்றுள்ளது. அதாவது, லிப்ட் முறையில் தூக்குப் பாலம் செயல்படுவது போன்று வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதாவது தற்போதுள்ள ரெயில் பாலத்தின் மையமான தூக்குப்பாலம், கப்பல்கள் வந்தால் இருபுறமும் ஊழியர்களை கொண்டு தூக்கும் வகையில் உள்ளது. ஆனால் புதிதாக அமையவிருக்கும் பாலத்தின் மையத்தில் தூக்குப்பாலம் நவீன தொழில்நுட்பத்தில் ‘லிப்ட்’ முறையில் அமைப்பது சிறப்புக்குரியதாகும்.
கப்பல்கள் வரும் போது, எந்திர சக்தியின் உதவியுடன் தூக்குப்பாலம் மேல்நோக்கி இயக்கப்படும். கப்பல்கள் சென்றபின் பழைய முறைக்கு கீழே இறக்கப்பட்டு, தண்டவாளத்துடன் இணைக்கும் வகையில் இந்த பாலம் உருவாக இருப்பதாக அந்த வீடியோ காட்சிகள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 1½ நிமிட நேரம் ஓடக்கூடிய இந்த வீடியோ பாம்பன் கடலின் அழகையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
Related Tags :
Next Story