புதுச்சேரியில் வருகிற 8-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு


புதுச்சேரியில் வருகிற 8-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 4:50 AM IST (Updated: 28 Dec 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வருகிற 8-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதுச்சேரி,

பிரதமர் மோடியின் தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியின் நடவடிக்கைகளை அனைத்து தொழிற்சங்கங்களும் கண்டித்துள்ளன. இதையொட்டி பொதுவேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை விளக்கி புதுவை சித்தன்குடி ஜெயராம் திருமண நிலையத்தில் நேற்று கருத்தரங்கு நடந்தது. ஐ.என்.டி.யு.சி. மாநில தலைவர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, சி.ஐ.டி.யு. தலைவர் முருகன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் அண்ணா அடைக்கலம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கருத்தரங்கில் தொழிலாளர் முன்னேற்ற சங்க தமிழ்நாடு பொதுச்செயலாளர் சண்முகம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், சி.ஐ.டி.யு. தமிழ்நாடு பொதுச்செயலாளர் சுகுமாறன், ஐ.என்.டி.யு.சி. தமிழ்மாநில துணைத்தலைவர் முனுசாமி, விடுதலை சிறுத்தைகளின் மாநில பொருளாளர் தமிழ்மாறன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். கருத்தரங்கில் ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ஞானசேகரன், சி.ஐ.டி.யு. செயலாளர் சீனுவாசன், ஏ.ஐ.சி.சி.டி.யு. பொதுச்செயலாளர் புருஷோத்தமன், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

*விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்.

*குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்கவேண்டும்.

*தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமலாக்கவேண்டும்.

*காண்டிராக்ட் முறையை ஒழித்து நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும்.

*பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது. சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது.

*மக்கள் நல திட்டங்களையும், தொழிலாளர் நல திட்டங்களையும் முடக்கி வரும் புதுவை கவர்னர் கிரண்பெடி வெளியேற வேண்டும்.

இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 8-ந்தேதி புதுச்சேரியில் மாநிலம் தழுவிய பந்த் (முழுஅடைப்பு) போராட்டம், 8 மற்றும் 9 தேதிகளில் பொது வேலைநிறுத்தம் நடத்துவது. மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story